Wednesday, June 9, 2010

சித்திரைத் திருவிழா



மதுரையில் நடைபெறும் முக்கியமான விழா சித்திரைத் திருவிழா. கோடைகாலமான ஏப்ரல்-மே மாதத்தில் நடக்கும் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவிற்கு தென்னிந்தியாவின் பல்வேறு மூலைகளிலிருந்தும் பக்தர்களும், யாத்ரீகர்களும் வருவது வழக்கம். இந்த மாதத்தில்தான் மீனாட்சிக்கு சுந்தரேசுவரருடன் திருமணம் முடிக்கும் விழா நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும். இந்த திருவிழாவிற்கு மட்டுமே மதுரைக்கு சுமார் பத்து லட்சம் மக்கள் வெளியூரிலிருந்து வருவார்கள். "கோவிந்தா" என்று லட்சக்கணக்கான மக்கள் முழங்க அழகர் ஆற்றில் இறங்குவார். மதுரையில் நடந்த வைணவ மற்றும் சைவ மதத்தினருக்கு இடையேயான சண்டையை தவிர்க்க திருமலை நாயக்கரால் முதல் முதலாக இரு மதத்தினருக்கும் பொதுவான திருவிழாவாக சித்திரைத் திருவிழா நடத்தப்பட்டு இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

அழகர் மீனாட்சியின் சகோதரர் ஆவார். அவர் மீனாட்சியின் திருமணத்தை நடத்திவைக்க அழகர் கோயிலில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வருகிறார். ஆனால் தான் வருவதற்கு முன்பே திருமணம் முடிந்ததை கேள்விப்படுகிறார். ஆற்றில் கூட கால் படாமல் திரும்பி வருகிறார். மீனாட்சி அம்மன் திருகல்யாணம், எதிர் சேவை, மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், தேரோட்டம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்குவது என்று நீண்ட நாட்களாக நடைபெறும். இந்த விழாவின் உச்சகட்டம் அழகர் ஆற்றில் இறங்குவது. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் சுமங்கலிகள் புதிய தாலிக்கயிறு அணிவார்கள். வேண்டுதலுக்காக அன்று சில பக்தர்கள் கோவிலுக்கு வரும் அனைவருக்கும் புதிய தாலிக்கயிறு வழங்குவார்கள். எதிர் சேவையின் போது அழகர் அணிய ஆண்டாள்(சூடித்தந்த சுடர்க்கொடி) திருக்கோவிலில் இருந்து மாலை வரும்.

அழகர் தங்க குதிரையில் மதுரைக்கு தன் தங்கை கல்யாணத்திற்காக பவனி வருவார். அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் பல்லகில் மதுரை வரை வருவார். வரும் வழயில் இருக்கும் 18 மண்டபங்களில் ஓய்வெடுத்து நிதானமாக வலம் வருவார். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல அழகர் வருவதற்கு முன்னால் அவரது உண்டியல்கள் வரும். அழகர் என்ன பட்டு உடுத்தி ஆற்றில் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் நிலவும். பச்சை பட்டு உடுத்தி இறங்கினால் அந்த ஆண்டு தமிழகத்தில் நல்ல மழை பெய்து பசுமையான ஆண்டாக இருக்கும் என நம்பப்படுகிறது. அழகர் வரும்பொழுது அவர் ஆற்றில் இறங்குவதற்க்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும். கடந்த சில வருடங்களாக பச்சை பட்டு உடுத்தி இறங்கியும் வைகை அணையில் தண்ணீர் இல்லாததால் அழகர் வாய்காலில் இறங்குகிறார் என்பது வேறு விஷயம்.

அழகர் திருவிழா நடைபெறுவது கோடைகாலத்தில். அதனால் அழகர் வரும் பாதை முழுவதும் நீர், பானகம் மற்றும் மோர் பந்தல்கள் பக்தர்களினால் அமைக்கப்பட்டிருக்கும் அழகரைக் காண வரும் பக்தர்களின் தாகத்தை தீர்க்க. சற்று வசதியானவர்கள் ரஸ்ணா கூட வழங்குவார்கள். இந்த வருட விழாவில் தாகம் கொண்ட யானை ஒன்று ஒரு பந்தலுக்குள் சென்று ஒரு ரஸ்ணா அண்டாவையே காலிசெய்தது. பலியிடல், மொட்டை போடுதல்,நேர்த்திக் கடன் செலுத்துதல் போன்றவை அழகர் கோயிலிலும் மேற்கொள்ளப் படுகின்றன. கள்ளழகர் வேடமிட்ட பக்தர்கள் வெயிலின் உக்கிரத்தை குறைக்க மக்களின்மேல் நீரை பீய்ச்சி அடிப்பார்கள். விசிறிகள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். அன்னதானம் நடைபெறும். அழகர் திருவிழா நடைபெறும் பொழுது மட்டுமே மதுரையில் சீரணி விற்கப்படும். அதிலும் கருப்பட்டி சீரணி அமிர்தமாக இருக்கும். சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் தமுக்கம் மைதானத்தில் சித்திரைப் பொருட்காட்சி நடைபெறும். கோடைகாலத்தில் மதுரைச் சிறுவர்களின் ஒரே பொழுதுபோக்கு சித்திரைப் பொருட்காட்சி.



அழகர் வரும்பொழுது மக்கள் தங்கள் கைகளின் வெல்லம் மற்றும் பொரிகடலை கலந்த பிரசாதத்தை ஒரு சொம்பில் வைத்து வாழை இலையால் மூடி, அதன் மேல கற்பூரத்தைக் கொளுத்தி, தாங்களாகவே அழகரை நோக்கி ஆரத்தி எடுத்துக்கொள்வார்கள்."சாமி இன்னிக்கு எங்க இருக்குது" என்பதே சித்திரைத் திருவிழாவில் முக்கியமான கேள்வியாக மக்களிடையே இருக்கும்.

மதுரையை சுற்றி உள்ள கிராம மக்கள் அனைவரும் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு மதுரைக்கு திருவிழா காண வருவார்கள். சிறு வயதில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய வண்டி அது. அதில் எல்லா வசதிகளும் இறக்கும். மாடு மட்டும் சுமார் எட்டு அடி உயரம் இருக்கும். சமையல் செய்ய பாத்திரம், அடுப்பு மற்றும் தூங்கும் வசதி எல்லாமே அதில் இருக்கும். மதுரையில் பொங்கல் அல்லது சித்திரைத் திருவிழாவிற்கு மட்டுமே வீட்டுக்கு வெள்ளை அடிப்பார்கள். ஊரே புத்தம் புதிதாக மாறி இறக்கும். சாதி, மதம் அனைத்தையும் கடந்து மதுரை மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு விழா சித்திரைத் திருவிழா.

Wednesday, June 2, 2010

மதுரை - அழகர் கோவில்



மதுரையின் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த கோவில் அழகர் கோவில். மதுரையிலிருந்து 21 கி.மீ. தூரத்தில் இருகின்றது அழகர் மலை. கிழக்கு மேற்காக 18 கி.மீ. நீளமும் 320 மீட்டர் உயரமும் உள்ள இம்மலை "திருமாலிருஞ்சோலை , உத்யானசைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி" முதலிய பெயர்களால் அழைக்கப்படுகிறது. இரண்டு அழகர் தலங்களை அழகர் மலை கொண்டுள்ளது. ஒரு அழகன் அடிவாரத்தில் இருக்கும் பெருமாள் அழகர்(கள்ளழகர்). மற்றொருவர் மலைமீது குடிகொண்டுள்ள தமிழ் அழகன் முருகன். ஆம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலை(சுட்ட பழம்) அழகர் மலையில் உள்ளது.அழகர் கோவில் மற்றும் மலையை சுற்றி இருந்த ஊர் அழகாபுரி என்ற பெயரைக்கொண்டு இருந்தது.அழகர் கோவில் அழகாபுரி கோட்டையின் உள்ளே அமைந்துள்ளது. கோட்டையின் மிஞ்சிய பாகங்களை இன்றும் கோவிலைச்சுற்றிக் காணலாம். இங்கே மூலவராக இருக்கும் பெருமாளின் மற்றொரு பெயர் பரமஸ்வாமி என்னும் சிவனின் பெயர். மத ஒற்றுமைக்காக இவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பிரசாதமாக அழகர் கோவில் புகழ் தோசை தருகிறார்கள். இங்கே இருக்கும் விநாயகரின் பெயர் தும்பிக்கை ஆழ்வார். இங்கே ஆண்டாளின் சன்னதிகூட உண்டு. ஆண்டாள் இங்கே பெரியாழ்வாருடன் வந்ததாக வரலாறு உண்டு. கள்ளழகர் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. வைணவத் திருத் தலங்களிலேயே ராஜகோபுரத்தில் தங்கக் கலசம் கொண்ட ஒரே கோவில். கோபுரம் முழுவதும் அழகான சிற்பங்களைக் கொண்டுள்ளது.




மலை மீது சென்றால் பழமுதிர்சோலையையும் முருகன் சந்நிதானத்தையும் காணலாம். மிக அழகான அமைதியான ஒரு இடமாகும். பழமுதிர்சோலையை அடுத்து ஒரு மூலிகை வனம் உண்டு. அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்த வனத்தில் பல அரிய மூலிகைகளை பராமரித்து வருகிறார்கள். இங்கே மரக்கன்றுகளை வாங்கலாம். இன்னும் சிறிது தூரம் சென்றால் அழகர் தீர்த்தம் என்றழைக்கப்படும் நூபுர கங்கை இருக்கிறது. என்றும் வற்றாத இந்த நீரானது கங்கை நீரை விட புனிதமானதாகக் கருதப்படுகிறது. மலைகளின் வழியாக வருவதால் பல்வேறு மூலிகை கடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவத்தன்மை உடையது என்று நம்பப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் இதில் குளிப்பதற்காக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கே ராக்காயி அம்மன் கோவில் உள்ளது. அடிவாரத்தில் இருந்து இங்கே செல்வதற்கு வாகன வசதி கோவில் நிர்வாகத்தால் அளிக்கப்படுகிறது.


அழகர் மலையில் கடவுள்களை காண்கிறோமோ இல்லையோ, நமது முன்னோர்கள் நிறையபேரைக் காணலாம். மலை முழுதும் குரங்குகள் தான். கையிலே உணவுப்பொருட்களை எடுத்துச்செல்ல முடியாது. உரிமையுடன் பிடுங்கிக்கொள்வார்கள். மூலிகை வனத்திற்கு பக்கத்தில் ஒரே மரத்தில் பல ஆயிரக்கணக்கான வவ்வால்களைக் காணலாம். பச்சை பசேலென்று இருக்கும் அழகர் கோவில் மதுரை இளைஞர்களின்(காதலர்களின்) முக்கிய சுற்றுலாத்தளமாக உள்ளது. அழகர் திருவிழா(சித்திரைத் திருவிழா) பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Friday, May 28, 2010

மதுரை - மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு


மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆலயம் மீனாட்சி , சுந்தரேஸ்வரரை முதன்மை விகிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள்ளது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைத்துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு. சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது.



மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.


மீனாட்சி அம்மன் திருக்கோவில் சுமார் ௮௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி ஆக இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலுனுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.



இக்கோயிலினுள் அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயககர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக் கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம் போன்ற கலையழகு மிக்க மண்டபங்கள் இருக்கின்றன. கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் இங்கு அமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் மிகச் சிறப்பு பெற்ற ஒன்றாகும். இம்மண்டபத்தில் 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபம் ஒன்றும் உள்ளது. (இந்த புது மண்டபம் முழுவதும் சிறு வணிகக்கடைகளாக அமைக்கப்பட்டு உள்ளது.)



மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம். மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதீகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும். 'மீனாட்சி சுந்தரேஸ்வரர்' ஆலயத்தில் மீனாட்சி , சுந்தரேஸ்வரர் விகிரக வடிவிலும் பூரிக்கப்படுகின்றன.



  • மதுரை மீனாட்சியில் அமைந்துள்ள முதன்மை விக்கிரகம் முழுவதுமாக தூய மரகத மாணிக்கத்தினால் உருவாக்கப்பட்டதாகும். மரகத்தின் இயற்கை வர்ணமான பச்சை நிறத்தில் காட்சி தரும் மூல விக்கிரகத்தினை "மரகதவல்லி" எனவும் அழைக்கின்றனர்.
  • மதுரை மீனாட்சி கோவில் 45 ஏக்கர் (180,000 சதுர மீட்டர்கள்) நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.ஆலயத்தின் மொத்த தள அமைப்பு 254 மீட்டர் நீளமும் 237 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.
  • இந்த ஆலயம் 8 கோபுரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 8 கோபுரங்களும், நான்கு முனை சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இரட்டை கோபுரத்தில் ஒன்று மீனாட்சிக்கும், மற்றொன்று சுந்தரேஸ்வரர்க்கும் அர்பணிக்கப்பட்டுள்ளது.
  • ஒன்பது தட்டுக்களை (அடுக்கு) கொண்ட கோபுரங்களுள் பிரசித்தமானதும் மிக உயரமானதுமாக தெற்கு வாசல் 170 அடி (52 மீற்றர்) உயரமுடையது.மற்றய வடக்கு, மேற்கு, கிழக்கு கோபுரங்கள் முறையே 160, 163, 161 அடி உயரம் என்பதும் குறிப்பிடதக்கது.
  • மீனாட்சி ஆலயம் பல உள்ளக மண்டபங்களையும் கொண்டுள்ளது. இவற்றுள் ஆயிரம் கால் (1000 தூண்கள்) மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது.
  • 600 வருடங்களின் மேலான கட்டுமானத்தில் உருவாகியதும் , மிகவும் கலை அம்சம் மிக்கதுமான இந்த ஆலயத்தில் மொத்தமாக 33 மில்லியன் கலை வேலைப்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
  • ஆலய உட்பகுதியில் ஒரு ஏக்கர் விஸ்தீரனத்தில் அமைந்துள்ள பொற்தாமரை குளமும் , தலவிருட்ஷமான கடம்ப மரமும் ஆலயத்தின் வரலாற்றில் மேலும் சிறப்பு சேர்க்கின்றன.
  • பலநூற்றாண்டு பழமையான கட்டிடவேலைப்பாடுகளை கொண்டுள்ள இந்த ஆலயம் நவீன பல் வர்ண பூர்ச்சுக்களால் தற்காலத்தில் அலங்கரிக்கப் பட்டுள்ளது.
  • வரலாற்று தொன்மையும் பிரமிக்கவைக்கும் கலை நுணுக்கமும் ஒன்றுசேர உள்ள இந்த ஆலயமனது உலக அதிசையங்களின் வரிசையில் போட்டி போட்டது நினைவிருக்கலாம்.

ஒரு நகரம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும், அதன் கட்டமைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும், அதன் வீதி அமைப்புகள் எவ்வாறு உருவாகப்பட வேண்டும் என்பதை மதுரையைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று கர்ம வீரர் காமராஜர் கூறி உள்ளார். அது மீனாட்சி அம்மன் கோவிலையும் அதைச்சுற்றி உள்ள வீதிகளையும் கருத்தில் கொண்டே.


கோவிலைச் சுற்றி பார்க்க : http://view360.in/virtualtour/madurai/

Thursday, May 27, 2010

மதுரை


மதுரை நான் பிறந்து வளர்ந்த ஊர். சென்னையில் யாரவது உங்கள் சொந்த ஊர் என்ன என்று கேட்கும்போது மதுரை என்று சொல்லும்போதே பெருமையாக இருக்கும். இப்படிப்பட்ட மதுரையின் சிறப்புகள் பல. நான் பேசும் தமிழை வைத்தே நான் மதுரைக்காரன் என்று மற்றவர்கள் கண்டுகொள்கின்றனர். சென்னை வந்ததும் எனது உச்சரிப்புகள் சற்று மாறி உள்ளன. எனது மதுரைத்தமிழ் நிறைய பேருக்கு புரியாததே அதற்கு காரணம். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர் எங்கள் மதுரை. கூடல் நகர், மல்லிகை மாநகர், தூங்கா நகரம், மதுரையம்பதி, கிழக்கின் ஏதென்ஸ் மற்றும் கோவில் நகரம் என்று பல சிறப்பு பெயர்கள் கொண்டது எங்கள் மதுரை. நீண்ட நெடிய வரலாறு கொண்டது.நகரத்தின் நடுவிலும் எல்லைகளிலும் கோவில்களைக் கொண்ட ஒரே நகரம் எங்கள் மதுரை. அந்த மதுரையின் சிறப்புகளை பதிவு செய்ய வேண்டும் என்று நீண்ட கால ஆசையை இப்போது தீர்த்துக்கொள்கிறேன்.

மதுரையின் வரலாறு

தமிழ்நாட்டின் தலை சிறந்த நகரங்களில் ஒன்று மதுரை. தமிழ் நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்று. சுமார் 2500 ஆண்டுகள் வரலாறு உடையது. மூவேந்தர்களில் ஒருவராம் பாண்டிய மன்னர்களின் தலை நகரம். வைகை ஆற்றங்கரையில் அமைந்த நகரம். நான்கு சங்கங்கள் வைத்து தாய் மொழியாம் தமிழ் மொழியை வளர்த்த நகரம். பாண்டியர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் ஆகியோரால் ஆளப்பெற்றது. இந்து கடவுள் மீனாட்சி பிறந்த இடமாக மதுரை கருதப்படுகிறது. ஆகவேதான் உலகப்புகழ் பெற்ற இந்து சமயத்தின் முக்கிய தளமான மீனாட்சி அம்மன் கோவிலை தன்னகத்தே கொண்டுள்ளது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன. மதுரை தமிழின் ஐம்ப்ருங்காப்பியங்களின் ஒன்றான சிலப்பதிகாரம் கதையின்படி அதன் நாயகி கண்ணகியால் ஒரு முறை எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப்பார்க்கும்போது மதுரை பல்வேறு அரசாட்சியின் கீழ் இருந்தாலும், பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்கள் காலம் தான் மதுரைக்குப் பொற்காலமாக இருந்திருக்கிறது. கிபி 1 முதல் 5ஆம் நூற்றாண்டு வரையில் சங்ககாலப் பாண்டியர்கள் வசமும், 5 முதல் 13ஆம் நூற்றாண்டு வரையில் இடைக்காலப் பாண்டியர்கள் வசமும் இருந்த மதுரை 14 முதல் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை டெல்லி சுல்தான்களின் வசம் இருந்தது. விஜயநகரப் பேரரசு மூலம் அந்த சுல்தான்களின் பொற்காலஆட்சி முறியடிக்கப்பட்டு 1520ல் விஜயநகரர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் நாயக்கர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அவர்கள் ஆட்சியாண்டில் 1623முதல் 1659வரையிலான மன்னர் திருமலையின் ஆட்சி மீனாட்சியம்மன் கோயிலுக்கும் மதுரைக்கும் ஒரு பொற்காலமாக இருந்திருக்கிறது. 1736ல் நாயக்கர்கள் வீழ்ச்சியுற, 1801ல் ஆங்கிலேயரிடம் சென்றது. ஆங்கிலேயர்கள் இவ்விடத்தின் கலைப் பொருட்களை வளர்க்காவிட்டாலும், அழிக்கவில்லை.தற்போதைய மதுரையின் மையப்பகுதி பெரும்பாலும் நாயக்கர்களால் கட்டப்பட்டதாகும். கோயில், மன்னர் அரண்மனை நடுவிலிருக்க, அதனைச் சுற்றி வீதிகளையும் குடியிருப்புகளையும் அமைக்கும், இந்து நகர அமைப்பான "சதுர மண்டல முறை" மதுரையில் பின்பற்றப்பட்டுள்ளது.

மதுரை மாநகரில் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம், காந்தி அருங்காட்சியகம் என்று சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அம்சங்கள் இந்நகரில் நிறைய இருக்கிறது. தூங்கா நகரமான மதுரைக்கு அருகில் அழகர்கோயில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் போன்ற இந்துமதத்தின் சிறப்புமிக்க சில தலங்கள் அமைந்துள்ள ஊர்கள் உள்ளன.

இது தவிர எக்கோ பார்க், ஜிகர்தாண்டா, வைகை நதி, சித்திரை திருவிழா மற்றும் மல்லி என பல சிறப்புகள் மதுரைக்கு மட்டுமே சொந்தம். இனிவரும் பதிவுகளில் மதுரையின் சிறப்புகள் ஒவொன்றாக பார்க்கலாம்.

Tuesday, May 25, 2010

விக்காத கடை

நம்ம யூத்து மழை பேஞ்ச அன்னிக்கு ரொம்ப ஸ்டைலா வந்தாரு. கும்முன்னு ஒரு சூ, கண்ணுல குளிர்கண்ணாடி, புதுசா கலரா ஒரு Tshirt , வலது கைல ஒரு குடை, இடது கைல ஒரு வாட்ச்னு ரொம்ப மணமணக்க வந்தாரு. என்ன தம்பி என்ன பண்ணிட்டு இருக்கனு கேட்டாரு. ஒன்னும் பண்ணல தல எப்பவும் போல வெட்டியா தான் இருக்கேன். என்னங்க சூ புதுசா? அப்டின்னு கேட்டேன். ஆமாம்பா USல வாங்கினது. குடை? அது சிங்கப்பூர். வாட்சு? அது துபாய். Tshirt? அது மலேசியா. அப்போ perfume? UKல வாங்குனேன்பா. அப்போ இந்தியால எதுவுமே வாங்கலையா? இந்தியாவுல எதுவுமே நல்லா இல்லப்பா அதுனால எப்பவுமே எல்லாமே பாரின்லதான் வாங்குவேன். இந்தியாவுல விக்கிற எதையும் வாங்க மாட்டேன்.

நாராயணா இந்த கொசுத் தொல்ல தாங்க முடியலன்னு யோசிச்சுட்டு இருக்கும்போது அவரே மாட்டுனாரு. தம்பி இந்த சட்டை நல்லா இருக்கே எங்க வாங்குன? கடைல தான். அது இல்லப்பா எந்தக் கடைல வாங்குன? துணிக்கடைல தான். ஐயோ எந்த இடத்துல வாங்குன? துணியெல்லாம் இருக்கும்ல, துணிகூட விப்பாங்கள்ள அந்த இடத்துலதான். சரி உன்வழிக்கே வர்றேன், எந்த ஊருல வாங்குன? எங்க ஊர்ல வாங்குனேன். ஏன்டா படுத்துற? இல்லைங்க துணி வாங்குனா உடுத்துரேன், படுத்துறது இல்ல. சரி உங்க ஊரு பேரு என்ன? மதுரை. மதுரைல எந்தக் கடைல வாங்குன? மதுரைல துணிக்கடைல வாங்குனேன்.

சரி அத விடுப்பா, எனக்கு ஒரு பேண்ட் வாங்கணும், எங்க வாங்கலாம்? நான் சொன்னேன் "நேரா போங்க, லெப்ட்ல திரும்புங்க, அங்க மூணாவதா ஒரு டெய்லர் கடை இருக்கும் அங்க போய் பேண்ட் கேளுங்க". ஏய் டெய்லர் கடைல பேண்ட் விக்க மாட்டாங்கப்பா நீ அங்க போய் வாங்க சொல்ற?. நீங்க தான இந்தியாவுல விக்கிற எதையுமே வாங்க மாட்டீங்கல, அதான் விக்காத கடையா சொன்னேன். யூத்து எஸ்கேப்பு.

முக்கியமான விசயம்

இன்று நண்பர் சேரல் பிறந்தநாள் - இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல.

Thursday, May 20, 2010

கெளம்பிட்டாய்ங்கய்யா 20/05/2010

மஜா மாமா

நாட்டாமை தோனி சமுக்காளத்துல உட்கார்ந்து இருக்காரு. பக்கத்துல ரைனா சொம்பு வெச்சுக்கிட்டு நிக்கிறாரு. "யாருடா பிராது கொடுத்தது" அப்டின்னு நாட்டாமை கேட்க, ஒடனே ரைனா "அது நெறய பேரு குடுத்துருக்காங்க ஐயா"னு சொல்றாரு. சரி சரி ஒவ்வொருத்தரா வரச்சொல்லு. கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு ஒருத்தரு வர்றாரு. "என்னலே உன் பிராது?" தோனி. "ஐயா இந்தியா ஏன் 20 /20 உலக கோப்பைல தோத்துச்சுங்க?". "யாருலே நீ?" . "ஐயா நான் தானுங்க சஹாரா நிர்வாகி". ஒடனே நாட்டாமை சொல்றாரு "செல்லாது செல்லாது. நீ டீம்க்கு ஸ்பான்சர் பண்ணா, ஒடனே பிராது குடுத்துடுவியா? அதான் எல்லா பயலுகளும் சட்டைல உன் லோகோவ போட்டு ஆடுறாங்கள, அது போதும். அடுத்து யாரு?". குறுந்தாடி வெச்ச ஒருத்தரு வர்றாரு."ஐயா இந்தியா ஏன் 20 /20 உலக கோப்பைல தோத்துச்சுங்க?". "யாருலே நீ" . "ஐயா நான் தானுங்க இந்தியா கிரிக்கெட் டீம் மேனேஜர்". நாட்டாமை "செல்லாது செல்லாது, டீம செலக்ட் பண்ணோம, பார் இருக்குற ஹோட்டல்ல ரூம புக் பண்ணோமானு இரு, அதான் உன் பையன IPLல விளையாட விட்டோம்ல அது போதும்". அடுத்து யாரு?". பாவமா ஒருத்தரு வர்றாரு."ஐயா இந்தியா ஏன் 20 /20 உலக கோப்பைல தோத்துச்சுங்க?". "யாருலே நீ" . "ஐயா நான் தானுங்க இந்திய கிரிக்கெட் ரசிகன்". "செல்லாது செல்லாது, IPL பார்த்தோமா , cheer girlsசோடா லெக் பீஸ் பார்த்தோமா அப்புறம் நாங்க நடுச்ச விளம்பரத்த பார்த்தோமான்னு இரு, அதான் உங்க கேப்டன் IPL கப் வாங்குராருல. அதுக்கு மேல உனக்கு ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடையாது, போய்கிட்டே இரு".

திடீர்னு ஒரு கண்ணாடி போட்ட ஆசாமி சிரிச்சுக்கிட்டே வர்றாரு. "யாருலே நீ?". வந்தவர் "நாட்டாமை நான் தான் மாமா என்ன தெரியலையா? ". " யாருக்கு மாமா?". "நான் எல்லா கிரிக்கெட் பிளேயர்ஸ்க்கும் மாமா, IPL மாமா, மோடி". நாட்டாமை "ஐயோ மாமா நீங்களா?, இப்டி அடையாளம் தெரியாம மாறிட்டீங்களே?. டேய் மாமாக்கு சொம்புல இருக்குற தீர்த்தத்த குடுடா, மாமா எத்தன தடவ நம்மள தீர்த்தத்தாலையே குளுப்பாட்டிருக்காரு, மாமா உங்க பிராது என்ன மாமா". மோடி "இந்தியா ஏன் 20 /20 உலக கோப்பைல தோத்துச்சுங்க மாப்புள". நாட்டாமை "என்ன பண்றது மாமா கப்பு வாங்கி தர்றதுக்கு உங்கள மாதிரி அங்க ஒரு மஜா மாமா இல்லையே?".
மோடி பாக்கெட்ல கோடி, ரசிகனுக்கு தெருக்கோடி

சுறா

நாலு பைட்டு, அஞ்சு பாட்டு(அதுல ரெண்டு குத்து பாட்டு), ஒரு பெரிய வில்லன் (ஆனா அவருதான் விஜய் படத்துல காமெடியன்), லூசு ஹீரோயின். அப்போ கதை, அத கேட்ட உனக்கு கிடைக்கும் உதை. அதான் பத்து படத்துக்கு முன்னாடியே சொல்லிட்டோம்ல அதை. இன்னும் 10 தமிழ்ப்படம் வந்தாலும் இவரு திருந்த மாட்டாரு. விஜய் படம் அப்டினா தமிழ் அகராதில விளங்காத படம்னு இருக்காம். சும்மா பறந்து பறந்து அடிக்கிராருப்பா படம் பாக்குறவங்கள.
சுறா - தியேட்டர விட்டு சீக்கிரமா ஓடப்போற புறா

பிம்பிளிக்கி பிளாப்பி

போன வாரம் ரங்கநாதன் தெருவுல நடந்து போய்க்கிட்டு இருந்தேங்க. திடீர்னு ஒரு சௌண்டு. " வாங்கம்மா வாங்க, வாங்கையா வாங்க. எந்த சட்டை எடுத்தாலும் பத்து ரூவா, வெறும் பத்தே ரூவா, பிம்பிளிக்கி பிளாப்பி" அப்டின்னு சட்டைய வித்துகிட்டு இருந்தாரு ஒருத்தரு. நல்ல குடுக்குராய்ங்கய்யா டீடெய்லு. ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?. சும்மா சொல்ல கூடாது, அந்த கடைல செம கூட்டம்.
பிம்பிளிக்கி பிளாப்பி - பத்தே பத்து ரூவா

சதுரங்கம்

சதுரங்கத்த கண்டு பிடுச்சதுக்காக இந்தியா பெருமைப்படலாமுங்க. நம்மள அதுல அடுச்சுக்க ஆளு இல்லீங்க. நம்ம விஸ்வநாத் மறுபடி உலக சாம்பியன் ஆய்ருக்காரு. மற்றுமொரு பெருமை இந்தியனுக்கு. யப்பா தோனி, அவரு செய்ச்சு.....செய்ச்சு.... கப்பு வாங்கிருக்காரு.
விஸ்வநாத் - வெற்றிநாத்

Tuesday, May 18, 2010

ரொமான்ஸ்

கல்யாணம் ஆனதுக்கப்புறம், ஒரு ரெண்டு மூணு மாசம் கலுச்சு ரொமான்ஸ் எப்டி பண்றது?. ஒரு நாள் உங்க மனைவி எழுந்திரிக்கிறதுக்கு முன்னாடி எழுந்து சிங்க்ல இருக்குற பாத்திரத்த எல்லாம் கிளீனா வெளக்கிட்டு, வீடு முழுசும் நல்லா சுத்தமா கூட்டி விட்டு, பால எடுத்து சுண்ட காய்ச்சி ஸ்ட்ராங்கா ஒரு காபி போட்டு உங்க மனைவிய எழுப்பி "Good Morning Dear " னு காபிய நீட்டுங்க. உங்க மனைவி "என்னங்க நீங்க காபி போட்டுட்டு வந்துடீங்க" அப்டின்னு சொல்லிட்டு காபிய குடிப்பாங்க. குடுச்சதும் காபி நல்லா இருந்தா அதிகாலை முத்தம் கூட உங்களுக்கு கிடைக்கலாம், ஆனா அது நீங்க போடுற காபிய பொருத்தது. அப்புறமா அவங்க எழுந்து வந்து வீட்ட பார்த்ததும் அடுத்த அதிர்ச்சி என்னங்க வீடு கூட கூட்டிடீங்க?.சமையல் அறைக்கு போனதும் என்னாச்சு ஐயாவுக்கு பாத்திரம் கூட விளக்கிட்டீங்க?. ஒடனே நீங்க "எல்லாம் உனக்காகத்தான் இன்னிக்கு எனக்கு லீவ் தான அதான் நானே எல்லா வேலையையும் முடுச்சுட்டேன், என்ன இந்த பால் தான் பொங்கிருச்சு" அப்டின்னு சொல்லணும். ஒடனே எங்க மனைவி உங்கள இருக்கமா கட்டி பிடுச்சுகிட்டு "பரவா இல்லைங்க,தேங்ஸ்டா புருஷா, ஐ லவ் யு " அப்டின்னு சொல்லுவாங்க. அப்புறம் என்ன ஒரே ரொமான்ஸ்தான் போங்க.

இதையெல்லாம் கேட்டுட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டா நெறைய ரொமான்ஸ் பண்ணலாம்னு நெனச்சா அவங்கள் பார்த்து நான் பரிதாப படுறேன். ஏன்னா அதுக்கப்புறம் தாண்டி மாப்புள்ள உனக்கு இருக்கு. "ஏங்க அதான் சமைச்சுட்டு இருக்கேன்ல, சும்மா டிவி பார்த்துகிட்டு இருந்தா என்ன அர்த்தம் போங்க போய் வீட்ட கூட்டுங்க, ஏங்க கொழந்தைய பார்த்துக்குவேனா இல்ல உங்களுக்கு காபி போடுவேனா, போங்க நீங்களா காபி போட்டுக்கோங்க, ஏங்க நான் கொழந்தைய தூங்க வைக்கணும் நீங்க அந்த பாத்திரம் எல்லாத்தையும் வெளக்கிட்டு வந்துடுங்க" இந்த மாதிரி நீங்க நெறைய பார்க்கணும். இந்த ரொமான்ஸ் உனக்கு தேவையா? அப்டின்னு வடிவேலு மாதிரி உங்கள நீங்களே அடுச்சுக்க வேண்டி வரும்.

சரி மறுபடி ரொமான்ஸ முதல்ல இருந்து ஆரம்பிக்கலாம்னு அந்த மூணு வேலையும் காலைல உங்க மனைவிக்கு முன்னாடியே எழுந்து பண்ணா, அதுக்கப்புறம் தான் இருக்கு கச்சேரியே. "உங்கள யாரு இந்த வேலையெல்லாம் பண்ண சொன்னது? இப்ப பாருங்க பால இப்டி பொங்க விட்டு அடுப்பையே நாறடுச்சுட்டீங்க, ஏங்க உங்களுக்கு மண்டைல எதுவுமே கிடையாதா? உங்கள யாரு வீடு கூட்ட சொன்னது, நேத்து என்னோட கம்மல் ரெண்டையும் அந்த மூலைல கழட்டி வெச்சுருந்தேன், அதையும் சேர்த்து கூட்டீங்க, போங்க போய் குப்பை தொட்டில தேடுங்க, என்னது குப்பைய வெளில கொட்டிடீங்களா? அது எங்க சித்தப்பாவோட பொண்ணோட நாத்தனாரோட தங்கச்சியோட அண்ணியோட பொண்ணு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கன்னியாகுமரி போனப்ப வாங்கிட்டு வந்தது. ஏங்க உங்கள நான் பாத்திரம் வெளக்க சொன்னேனா? முழு சோப்பையும் கரச்சுட்டீங்க, நான் அத ஒரு வாரத்துக்கு வெச்சு தேச்சுருப்பேன். இப்டியா பாத்திரத்த கழுவுவாங்க, ஒரே சோப்பு எனக்கு எப்பவுமே ஒன்னுக்கு ரெண்டா இழுத்து விடுறதே உங்க வேலையா போச்சு. போங்க போய் உங்க வேலைய மட்டும் பாருங்க. போன்னு சொன்ன ஒடனே போய்டுவீங்களா, இந்த அடுப்ப கொஞ்சம் தொடைங்க". இப்ப சொல்லுங்க இந்த ரொமான்ஸ் உங்களுக்கு தேவையா? என்னது என்னோட ரொமான்ஸ் எப்டி இருக்கா.... அவ்வ்வ்வவ்வ்............