Tuesday, June 29, 2010

ராவணன்


ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ். அதே மாதிரிதான் ராவணன் படத்த பாக்குரவங்களுக்கும். சாமானியனுக்கு எடுக்குற படத்த பண்டிதர்கள் அப்டின்னு தங்களைத் தாங்களே சொல்லிக்கிற சில சின்ன பசங்க ராவணன் படம் நல்லா இல்ல, வசனமே புரியல, திரைக்கதை சரி இல்ல அப்புறம் ஏ.ஆர். ரஹ்மான் இசை சரி இல்ல அப்டின்னு சொல்லிக்கிட்டு திரிறாய்ங்க. அதாவது எல்லாரையும் சகட்டு மேனிக்கு திட்டனும் விமர்சனம் பண்ணனும் அப்புறம் குற்றம் சொல்லணும் அதுல பிரபலமாகனும், இத மட்டுமே தன்னோட வாழ்கையின் குறிக்கோளாய், லட்சியமாய் கொண்ட சாருநிவேதிதா ராவணன் படத்த ரொம்ப கொதறி இருக்காரு. இதெல்லாம் ஒரு பொழப்பா அப்டின்னு கேக்குரவங்ககிட்ட அது தான் அவரோட பொழப்பு அப்டின்னு தாழ்மையுடன் சொல்லிக்குறேன். வீரையா அப்டினா அது வீரப்பனாம், அவர இந்த படத்துல மணி நல்லவரா காமிச்சுட்டாரம். சாருவோட மகத்தான கண்டுபிடிப்பு இது. முடியல!!!!. இவர பெர்முடா முக்கோணம் அனுப்பனும். இவர பத்தி வினவுல ஒன்னு சொல்லிருந்தாங்க, அத படுச்சு சிரிச்சு சிரிச்சு வயறு வலி வந்துடுச்சு. ஒருத்தன் ஒரு பீர் வாங்கி குடுத்தா ஒடனே அவன தன்னோட சீடனா ஏத்துகிட்டு அவனோட புகழ் பாடுவாராம். ஜெயமோகன் ஆபீஸ்ல தூங்குறத பத்தி ப்ளாக்ல எழுதுறாருன்னு குத்தம் சொல்ற இவரு நாய் மேய்க்கிறத என்னவோ நாட்டைக் காப்பாத்துற மாதிரி சொல்றாரு அவரோட ப்ளாக்ல.

மக்களுக்கு இசை பிடுச்சுருக்கு, விக்ரம் & ஐஸ்வர்யா நடிப்பு பிடுச்சுருக்கு. படத்த எடுத்த விதம் பிடுச்சுருக்கு. ஒரு ரெண்டு மணிநேரம் தங்களை மறந்து சில விஷயங்கள ரசிக்கத்தான் மக்கள் படத்துக்கு போறாங்க. அவங்கள இந்த படம் கட்டாயம் ஏமாத்தாது. வீரையாவாவே விக்ரம் வாழ்துருக்காரு. அவருக்கும் ஐஸ்வர்யாக்கும் இடைல வரும் அந்த மெல்லிய உறவை எவ்ளோ கண்ணியமா காமிக்கணுமோ அவ்ளோ கண்ணியமா மணி காமிச்சிருக்காரு. படத்தோட ஹீரோக்கள் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஒளிப்பதிவாளர். ஏ.ஆர். ரஹ்மான் பேர போட்டதும் தியேட்டர்ல அப்டி ஒரு விசில் சத்தம். எப்பவும் மணி படத்துல எல்லாரையும் தாண்டி மணி ஹீரோவா தெரிவார். ஆனா இந்த படத்துல அவரையும் தாண்டி இவங்க தெரிறாங்க. ஆர்ட் டைரக்டர் அவரோட பணிய ரொம்ப சிறப்பா செஞ்சுருக்காரு. தன் தங்கச்சிய சிதச்சவங்கள கொன்னுட்டு அதுக்கு காரணமானவன அசிங்கப் படுத்துறாரு. தன் தங்கச்சிய நல்லா பாத்துக்குவான்னு நம்பி கல்யாணம் செஞ்சு குடுத்த மாப்பிளை அவளை கை விட்டுட்டு பயந்து ஓடினதும் அவனோட கைய வெட்டுறாரு வீரையா. இதெல்லாம் நடக்காத காரியம், இப்டியா பண்ணுவாங்கனு சொல்ற சின்ன பய மக்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன். உங்கள யாரும் படம் பாக்க பாக்கு வெத்தல வெச்சு அழைக்கல. படத்துல எல்லாமே கரெக்டா இருக்கானு கேட்டா இல்லன்னு தான் சொல்லணும். நூறு சதம் இல்லனாலும் எண்பது சதம் சிறப்பாவே இருக்கு. இது விமர்சனம் இல்ல மக்களே என்னோட கருத்து. படம் பாக்குறதும் பாக்காததும் உங்க இஷ்டம். படம் பாக்குறதா இருந்தா தியேட்டர்ல பாருங்க குட் விசுவல் ட்ரீட்.

Wednesday, June 9, 2010

சித்திரைத் திருவிழா



மதுரையில் நடைபெறும் முக்கியமான விழா சித்திரைத் திருவிழா. கோடைகாலமான ஏப்ரல்-மே மாதத்தில் நடக்கும் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவிற்கு தென்னிந்தியாவின் பல்வேறு மூலைகளிலிருந்தும் பக்தர்களும், யாத்ரீகர்களும் வருவது வழக்கம். இந்த மாதத்தில்தான் மீனாட்சிக்கு சுந்தரேசுவரருடன் திருமணம் முடிக்கும் விழா நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும். இந்த திருவிழாவிற்கு மட்டுமே மதுரைக்கு சுமார் பத்து லட்சம் மக்கள் வெளியூரிலிருந்து வருவார்கள். "கோவிந்தா" என்று லட்சக்கணக்கான மக்கள் முழங்க அழகர் ஆற்றில் இறங்குவார். மதுரையில் நடந்த வைணவ மற்றும் சைவ மதத்தினருக்கு இடையேயான சண்டையை தவிர்க்க திருமலை நாயக்கரால் முதல் முதலாக இரு மதத்தினருக்கும் பொதுவான திருவிழாவாக சித்திரைத் திருவிழா நடத்தப்பட்டு இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

அழகர் மீனாட்சியின் சகோதரர் ஆவார். அவர் மீனாட்சியின் திருமணத்தை நடத்திவைக்க அழகர் கோயிலில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வருகிறார். ஆனால் தான் வருவதற்கு முன்பே திருமணம் முடிந்ததை கேள்விப்படுகிறார். ஆற்றில் கூட கால் படாமல் திரும்பி வருகிறார். மீனாட்சி அம்மன் திருகல்யாணம், எதிர் சேவை, மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், தேரோட்டம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்குவது என்று நீண்ட நாட்களாக நடைபெறும். இந்த விழாவின் உச்சகட்டம் அழகர் ஆற்றில் இறங்குவது. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் சுமங்கலிகள் புதிய தாலிக்கயிறு அணிவார்கள். வேண்டுதலுக்காக அன்று சில பக்தர்கள் கோவிலுக்கு வரும் அனைவருக்கும் புதிய தாலிக்கயிறு வழங்குவார்கள். எதிர் சேவையின் போது அழகர் அணிய ஆண்டாள்(சூடித்தந்த சுடர்க்கொடி) திருக்கோவிலில் இருந்து மாலை வரும்.

அழகர் தங்க குதிரையில் மதுரைக்கு தன் தங்கை கல்யாணத்திற்காக பவனி வருவார். அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் பல்லகில் மதுரை வரை வருவார். வரும் வழயில் இருக்கும் 18 மண்டபங்களில் ஓய்வெடுத்து நிதானமாக வலம் வருவார். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல அழகர் வருவதற்கு முன்னால் அவரது உண்டியல்கள் வரும். அழகர் என்ன பட்டு உடுத்தி ஆற்றில் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் நிலவும். பச்சை பட்டு உடுத்தி இறங்கினால் அந்த ஆண்டு தமிழகத்தில் நல்ல மழை பெய்து பசுமையான ஆண்டாக இருக்கும் என நம்பப்படுகிறது. அழகர் வரும்பொழுது அவர் ஆற்றில் இறங்குவதற்க்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும். கடந்த சில வருடங்களாக பச்சை பட்டு உடுத்தி இறங்கியும் வைகை அணையில் தண்ணீர் இல்லாததால் அழகர் வாய்காலில் இறங்குகிறார் என்பது வேறு விஷயம்.

அழகர் திருவிழா நடைபெறுவது கோடைகாலத்தில். அதனால் அழகர் வரும் பாதை முழுவதும் நீர், பானகம் மற்றும் மோர் பந்தல்கள் பக்தர்களினால் அமைக்கப்பட்டிருக்கும் அழகரைக் காண வரும் பக்தர்களின் தாகத்தை தீர்க்க. சற்று வசதியானவர்கள் ரஸ்ணா கூட வழங்குவார்கள். இந்த வருட விழாவில் தாகம் கொண்ட யானை ஒன்று ஒரு பந்தலுக்குள் சென்று ஒரு ரஸ்ணா அண்டாவையே காலிசெய்தது. பலியிடல், மொட்டை போடுதல்,நேர்த்திக் கடன் செலுத்துதல் போன்றவை அழகர் கோயிலிலும் மேற்கொள்ளப் படுகின்றன. கள்ளழகர் வேடமிட்ட பக்தர்கள் வெயிலின் உக்கிரத்தை குறைக்க மக்களின்மேல் நீரை பீய்ச்சி அடிப்பார்கள். விசிறிகள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். அன்னதானம் நடைபெறும். அழகர் திருவிழா நடைபெறும் பொழுது மட்டுமே மதுரையில் சீரணி விற்கப்படும். அதிலும் கருப்பட்டி சீரணி அமிர்தமாக இருக்கும். சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் தமுக்கம் மைதானத்தில் சித்திரைப் பொருட்காட்சி நடைபெறும். கோடைகாலத்தில் மதுரைச் சிறுவர்களின் ஒரே பொழுதுபோக்கு சித்திரைப் பொருட்காட்சி.



அழகர் வரும்பொழுது மக்கள் தங்கள் கைகளின் வெல்லம் மற்றும் பொரிகடலை கலந்த பிரசாதத்தை ஒரு சொம்பில் வைத்து வாழை இலையால் மூடி, அதன் மேல கற்பூரத்தைக் கொளுத்தி, தாங்களாகவே அழகரை நோக்கி ஆரத்தி எடுத்துக்கொள்வார்கள்."சாமி இன்னிக்கு எங்க இருக்குது" என்பதே சித்திரைத் திருவிழாவில் முக்கியமான கேள்வியாக மக்களிடையே இருக்கும்.

மதுரையை சுற்றி உள்ள கிராம மக்கள் அனைவரும் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு மதுரைக்கு திருவிழா காண வருவார்கள். சிறு வயதில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய வண்டி அது. அதில் எல்லா வசதிகளும் இறக்கும். மாடு மட்டும் சுமார் எட்டு அடி உயரம் இருக்கும். சமையல் செய்ய பாத்திரம், அடுப்பு மற்றும் தூங்கும் வசதி எல்லாமே அதில் இருக்கும். மதுரையில் பொங்கல் அல்லது சித்திரைத் திருவிழாவிற்கு மட்டுமே வீட்டுக்கு வெள்ளை அடிப்பார்கள். ஊரே புத்தம் புதிதாக மாறி இறக்கும். சாதி, மதம் அனைத்தையும் கடந்து மதுரை மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு விழா சித்திரைத் திருவிழா.

Wednesday, June 2, 2010

மதுரை - அழகர் கோவில்



மதுரையின் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த கோவில் அழகர் கோவில். மதுரையிலிருந்து 21 கி.மீ. தூரத்தில் இருகின்றது அழகர் மலை. கிழக்கு மேற்காக 18 கி.மீ. நீளமும் 320 மீட்டர் உயரமும் உள்ள இம்மலை "திருமாலிருஞ்சோலை , உத்யானசைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி" முதலிய பெயர்களால் அழைக்கப்படுகிறது. இரண்டு அழகர் தலங்களை அழகர் மலை கொண்டுள்ளது. ஒரு அழகன் அடிவாரத்தில் இருக்கும் பெருமாள் அழகர்(கள்ளழகர்). மற்றொருவர் மலைமீது குடிகொண்டுள்ள தமிழ் அழகன் முருகன். ஆம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலை(சுட்ட பழம்) அழகர் மலையில் உள்ளது.அழகர் கோவில் மற்றும் மலையை சுற்றி இருந்த ஊர் அழகாபுரி என்ற பெயரைக்கொண்டு இருந்தது.அழகர் கோவில் அழகாபுரி கோட்டையின் உள்ளே அமைந்துள்ளது. கோட்டையின் மிஞ்சிய பாகங்களை இன்றும் கோவிலைச்சுற்றிக் காணலாம். இங்கே மூலவராக இருக்கும் பெருமாளின் மற்றொரு பெயர் பரமஸ்வாமி என்னும் சிவனின் பெயர். மத ஒற்றுமைக்காக இவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பிரசாதமாக அழகர் கோவில் புகழ் தோசை தருகிறார்கள். இங்கே இருக்கும் விநாயகரின் பெயர் தும்பிக்கை ஆழ்வார். இங்கே ஆண்டாளின் சன்னதிகூட உண்டு. ஆண்டாள் இங்கே பெரியாழ்வாருடன் வந்ததாக வரலாறு உண்டு. கள்ளழகர் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. வைணவத் திருத் தலங்களிலேயே ராஜகோபுரத்தில் தங்கக் கலசம் கொண்ட ஒரே கோவில். கோபுரம் முழுவதும் அழகான சிற்பங்களைக் கொண்டுள்ளது.




மலை மீது சென்றால் பழமுதிர்சோலையையும் முருகன் சந்நிதானத்தையும் காணலாம். மிக அழகான அமைதியான ஒரு இடமாகும். பழமுதிர்சோலையை அடுத்து ஒரு மூலிகை வனம் உண்டு. அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்த வனத்தில் பல அரிய மூலிகைகளை பராமரித்து வருகிறார்கள். இங்கே மரக்கன்றுகளை வாங்கலாம். இன்னும் சிறிது தூரம் சென்றால் அழகர் தீர்த்தம் என்றழைக்கப்படும் நூபுர கங்கை இருக்கிறது. என்றும் வற்றாத இந்த நீரானது கங்கை நீரை விட புனிதமானதாகக் கருதப்படுகிறது. மலைகளின் வழியாக வருவதால் பல்வேறு மூலிகை கடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவத்தன்மை உடையது என்று நம்பப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் இதில் குளிப்பதற்காக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கே ராக்காயி அம்மன் கோவில் உள்ளது. அடிவாரத்தில் இருந்து இங்கே செல்வதற்கு வாகன வசதி கோவில் நிர்வாகத்தால் அளிக்கப்படுகிறது.


அழகர் மலையில் கடவுள்களை காண்கிறோமோ இல்லையோ, நமது முன்னோர்கள் நிறையபேரைக் காணலாம். மலை முழுதும் குரங்குகள் தான். கையிலே உணவுப்பொருட்களை எடுத்துச்செல்ல முடியாது. உரிமையுடன் பிடுங்கிக்கொள்வார்கள். மூலிகை வனத்திற்கு பக்கத்தில் ஒரே மரத்தில் பல ஆயிரக்கணக்கான வவ்வால்களைக் காணலாம். பச்சை பசேலென்று இருக்கும் அழகர் கோவில் மதுரை இளைஞர்களின்(காதலர்களின்) முக்கிய சுற்றுலாத்தளமாக உள்ளது. அழகர் திருவிழா(சித்திரைத் திருவிழா) பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.