Sunday, October 23, 2011

என் இனிய மகளே

யாருமில்லாப் பின்னிரவில்
என் தனிமையை தின்று கொண்டிருந்த அறையில்
இன்று உன் ஸ்பரிசமே எங்கும் விரவியுள்ளது

விரக்தியைத் தேடும் என் தனிமையை
உன் அணைப்பு விரட்டுகிறது

வறண்ட பாலையாய் இருண்டு கிடக்கும் வாழ்க்கையை
உன் இதழ் முத்தத்தினால் துளிர்க்கச்செய்தாய்

திக்குத்தெரியாமல் கிடந்த என் வாழ்க்கைக்குள்
வந்தாய் வழிகாட்டியாய்

எப்பெரும் துன்பமும் இடரும்
உன் சிறு புன்னகையில் சிக்கிச் சிதறிப்போனது

உன் பிஞ்சு விரலை பிடித்து நடைபயிலையிலே
என் தந்தையை இன்னும் அதிகம் நேசிக்கச் செய்கிறாய்

இனி வாழும் நாட்கள் யாவும் உனக்காகவே இன்றி
எனக்காக அல்ல என் இனிய(யா) மகளே

Saturday, August 20, 2011

காத்தாடி

காற்றின் விசையில் கயிறு அறுந்து
விண்ணோக்கி பறக்கும் காத்தாடி போல
திக்குத்தெரியாமல் அலைபாயும் மனசு

சலனமின்றி வெக்கை புழுங்கும்
வேனிற்காலத்து கிணறு போன்று
வெறுமை ஆகியது வாழ்க்கை

சிதறிக்கிடக்கும் மௌனங்களை அள்ளியெடுத்து
கோர்க்கிறேன் மாலையாக
முடிச்சவிழ்க்கும் வித்தை தெரிந்த
உன்னிடம் விளையாடக் கொடுக்கிறேன்
ஒவ்வொரு மெளனமாக

தொலைந்துபோனவை

தொலைதூர ரயில் சத்தம்

தொடர்ந்து கேட்கும் குயிலின் குரல்

பார்த்து ரசிக்க பறவைகள்

பரவசமடைய வைக்கும் சிட்டு குருவிகள்

அலைபேசி இல்லா அருமையான காலமது

கோடையில் வறண்ட கண்மாயில்

சுகமான மட்டைபந்து விளையாட்டு

பருவம் மாறும்பொழுது மாறும் விளையாட்டுக்கள்

கிட்டி, பம்பரம், சில்லாக்கு சீட்டு அப்புறமா கோலிகுண்டு

மழை பெய்தால் ஊரணியில் குளியல்

குளியல் முடித்து தூண்டிலில் பிடித்த மீன்கள்

ஆயுத பூஜையானால் காலனியில் கூடுப்படயல்

வெயிலில் சுற்றி சூடுபிடித்து சுண்ணாம்பு தேடிய நாட்கள்

கார்கால குளிரை மறைக்க அப்பாவின் சட்டை

கண்மூடி தூங்க வைக்கும் அம்மாவின் தலைகோதும் விரல்

உடலினை உறுதி செய்த மிதிவண்டி

இராவுணவை முழுங்கச்செய்த ஆச்சியின் விக்ரமாதித்தன் கதைகள்

மாலை முழுதும் ஓடிப்பிடித்து விளையாடி

மின்சாரம் இல்லா நேரங்களில் ஒளிந்து பிடித்து விளையாடி

கணினி இல்லா உலகில் நாங்களே சுதந்திரப் பறவைகள்

வாசிப்பை தொடங்கி வைத்த அம்புலி மாமா

சகிப்பை கற்றுத்தந்த பள்ளி வாழ்க்கை

தோல்வியை கற்றுத்தந்த விளையாட்டுகள்

வெற்றியடைய சொல்லித்தந்த தோல்விகள்

கனமானது நெஞ்சம் இந்த பால்ய காலத்துச் சுவடுகள் இல்லாமல்

வளரப்போகும் நம் சந்ததிகளை நினைத்து